i

எங்களைப் பற்றி...

சங்கத்தின் துவக்கம்:

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டுடன் ஈழவ சமுதாய முன்னேற்றத்திற்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கும் பாடுபட்ட கேரளாவின் ஸ்ரீ நாராயண குருவின் வழியில் அவரது கொள்கைகளை முன்னிலைப்படுத்தி அவரது கொள்கைகளை வலியுறுத்தி,   குருவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் தமிழ் நாட்டில் ஈழவர் என்று அழைக்கப்படும் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தினர்தான். வரலாற்று வழியில், சிவருத்திர புராணம் கூறும் தகவல்களின் அடிப்படையில், ஈழ தேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிவருத்திர மன்னரின் வழித் தோன்றல்கள் ஈழவர்கள் என்று அழைக்கப்பட்ட்டனர்.

தமிழ்நாட்டில் ஈழவர், இல்லத்தார், சீர்குடி வேளாளர் என அழைக்கப்பட்டு இப்போது இல்லத்துப் பிள்ளைமார் என பொதுவாக அழைக்கப்படும் இந்த சமுதாயத்தினர் அதிகமாக தமிழ்நாட்டின் தென்பகுதியிலும்,   பிற பகுதிகளில் சிறிதளவுமாக இருக்கின்றனர். இந்த சமுதாயத்தினரில் 50 சதவிகிதத்திற்கும் மேல் கூலி வேலை செய்தும், தொழில் நிறுவனங்களில் கடுமையான பணி புரிந்தும் வரும் இவர்கள் வறுமைக் கோட்டில்தான் இருந்து வருகின்றனர். சுமார் 10 சதவிகிதம் பேர் மட்டுமே ஓரளவு உயர்கல்வி பெற்றவர்கள் என்பதுடன் அரசுப் பணியிலிருப்பவர்கள் என்றும் சொல்லலாம்.  தமிழ்நாட்டில் அரசியலில்  மறைந்த மதுரை மேயர் முத்து,  மறைந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் சம்பத் என்று சிலரையே குறிப்பிட முடிகிறது.

இந்தச் சூழ்நிலையில், சென்னையச் சேர்ந்த தொழிலதிபர் கே.வி.கனகாம்பரம், நாகர்கோவிலைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீகுமார், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் இளங்கோவன், பி.குமரேசன், எம்.சரவணன், வி.பாண்டி, ரவி, நாராயண குரு, எஸ்.முருகன், ஞான மாணிக்கம், கண்பதியா பிள்ளை, என்.வி.முருகேசன், கே.முருகன், பி.முருகேசன், ஹார்விபட்டி சுந்தரம் பிள்ளை, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆசிர்வாதம், கண்மாய்க்கரை ராமராஜ் , குரல்மணி ஆசிரியர் தினமணி, மற்றும் அப்பாத்துரை ஆகியோரைக் கொண்ட 02-012-2006-ல் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழ்நாட்டில் ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி 21-10-2007ல் ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) ஒரு சங்கமாக தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் நோக்கம்:

ஸ்ரீ நாராயண குரு உலகத்தின் தத்துவ ஞானிகளுள் ஒருவராகப் போற்றப்படுகிறார். ஸ்ரீ நாராயண குருவின் தத்துவங்கள் உலகில் அமைதியையும், அனைவரும் சமம் என்பதையும் வலியுறுத்துவதாக இருக்கிறது. இவரது வாழ்க்கை நம் வாழ்வில் வரும் இடர்களை எப்படி எதிர்கொள்வது என்பதை விளக்கும் பாடங்களாக இருக்கிறது. ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) தமிழனாக அதே சமயம் இந்தியனாக இருப்பதை வலியுறுத்துகிறது. மேலும், தமிழனாக தனிப்பட்ட நிலை தவிர்க்கவும் விரும்புகிறது. அதாவது முதலில் தமிழனாகவும் அடுத்த நிலயில் இந்தியனாகவும் இருக்க வேண்டும் என்பதில் வலுவாக இருக்கிறது. ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) முதலீட்டுச் சந்தைப் பொருளாதரத்தை வரவேற்கிறது அதே சமயம் முதலாளித்துவத்தை எதிர்ப்பதில்லை. தாழ்ந்த நிலையில் இருப்பவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) ஸ்ரீ நாராயண குரு வழியைப் பின் பற்றி வரும் கேரளாவின் SNDP மற்றும் SNDS கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலுள்ள இடிகாஸ், பண்டாரி சமுதாயத்தினர், மற்றும் ஸ்ரீ நாராயண குருவின் வழியை உண்மையாகப் பின்பற்றி வருபவர்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது.

உறுப்பினர்களும் நிதி நிலையும்:

ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) யில் ஸ்ரீ நாராயண குருவின் வழியை உண்மையாகக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உறுப்பினராக இணைந்து கொள்ள முடியும். மதுரை ஞான ஒளிவுபுரம் கனரா வங்கியில் 21-10-2007 ம் தேதியில் ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP)க்கான வங்கிக் கணக்கு (எண்: 91316) துவங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் செலுத்தும் சந்தாத் தொகை முழுவது இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தற்போது இந்தக் கணக்கிலிருந்து கட்டிடப்பணி தவிர  வேறு செலவுகளுக்கு பணம் எடுத்து செலவு செய்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. உறுப்பினர் சந்தாத் தொகையாக வருடத்திற்கு ரூ50/- எனவும், வாழ்நாள் சந்தாத் தொகையாக ரூ250/- எனவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 16-02-2008-ம் தேதியன்று மதுரை ராமலிங்கசாமி மகாலில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் மறு சீரமைப்புக் கூட்டத்தில் புதிதாக சில பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேரவையின் செயல்பாடுகள் குறித்து விவாதித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும்  ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளை சுவரொட்டிகள், கருத்தரங்குகள் மூலம்   தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப் பட்டது.

ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவையின் முழக்கமாக கீழ்காணும் வாக்கியம் தேர்வு செய்யப்பட்டது.

தமிழனுக்கு உண்டு ஒரு சாதி அதுவே எங்கள் தமிழ் சாதி

நிர்வாகக்குழு:

தலைவர்- திரு. கே.வி.கனகாம்பரம், சென்னை.
செயலாளர்- திரு. பேராசிரியர். ஸ்ரீ குமார், நாகர்கோவில்.
பொதுச் செயலாளர்- திரு. எஸ்.இளங்கோவன், மதுரை.
பொருளாளர்- திரு. ஏ. சுப்பிரமணியன்.
பத்திரிகையாளர்- திரு. என்.தினமணி.

ஆகியோருடன் 30 மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவினைக் கொண்டு இயங்கி வருகிறது. இனி வரும் காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியிலும் பேரவையின் கிளைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றும் விதமாக பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையும், நிர்வாகக் குழுவும் தேவைக்கேற்றபடி அதிகரிக்கப்படும்.

ஸ்ரீ நாராயண குருவின் வழியில் நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) மெதுவாகப் பயணித்தாலும் வெற்றியை எட்டிப் பிடிப்பது உறுதி என்கிற இலட்சியத்துடன் தொடர்கிறது.

முத்துக்கமலம் இணைய இதழ் படித்தீர்களா?

Linked to muthukamalam.com

 

Google

English

Dedicated by: Sri Narayana Guru Panpattu Peravai (SNPP), 41, West Ponnagaram Main Road, Madurai-625 016, India.